மாணவர்களிடம் ஒளிந்துள்ள படைப்பாற்றலை, உலகிற்கு அளிக்க, இந்த பக்கம் பயன்படும். விரைவில் மாணவசெல்வங்களின், கதை, கவிதை, ஓவியம், போன்றவை இப்பக்கத்தை அலங்கரிக்கும்
கர்மவீரர் காமராஜர்
தொகுப்பு :
எம். முனீஸ்வரன்
பத்தாம் வகுப்பு "அ" பிரிவு
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர்
அரசியல்
1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.
வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.
கல்விக்கண் கொடுத்தவர்
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.
“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அரசியல் பணி:
மாநில முதல்வர் இருக்கும் தகுதி பெரும் பணக்கார்ர்களுக்கும் மிட்டாமிராசுதார்ர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் மனிதர் காமராஜர்தான். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்குச் சாவு மணி அடித்தது அவரது மிகப் பெரியச் சாதனை.
பதவி ஆசை அற்றவரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்நேருவிற்குப் பிடிக்காதவர்களைப் பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் காமராஜர் பதவி விலகும் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இது அவரது அரசியல் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டு ஆகும். நேருவுக்குப் பின் லால்பகதூரைப் பிரதமராக்கியது அவரது அரசியல் திறமைக்கு தக்கச்சான்று ஆகும்.
“இந்தியாவைக் காப்போம் – ஜனநாயகத்தைக் காப்போம்” என்பது விருதுநகர் வீர்ரின் வேத வாக்கு.
அணைக்கட்டுகள்:
காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.
மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.
சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.
நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.
1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் நிறுவனங்கள்:
காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.
இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.
இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

